Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு தாமதம் திட்டமிட்ட சதி: ராமதாஸ் குற்றச்சா‌ற்று!

மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு தாமதம் திட்டமிட்ட சதி: ராமதாஸ் குற்றச்சா‌ற்று!
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (10:14 IST)
தமிழகத்தில் மரு‌த்துவ படி‌ப்பு‌க்கான இரண்டாம் கட்ட கல‌ந்தா‌ய்வு அட்டவணை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''மருத்துவப் படிப்புகளுக்கான கல‌ந்தா‌ய்வு, கடந்த ஆண்டைப் போல் நடத்தப்பட்டது. இதில் எந்தவித காலதாமதமும் இல்லை என்று தி.மு.க அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் கல‌ந்தா‌ய்வு அட்டவணையை 6.7.2007ல் மருத்துவக் கல்வி இயக்குனர் வெளியிட்டார்.

அந்த அட்டவணையிப்படி ஜூலை 9 முதல் 16ஆம் தேதி வரை முதல்கட்ட கல‌ந்தா‌ய்வு நடத்தப்பட்டு, அதிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

ஆனால், இந்த ஆண்டு இந்த அட்டவணை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை முதல்கட்ட கல‌ந்தா‌ய்வு நடந்துள்ளது. 2ம் கட்ட கல‌ந்தா‌ய்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த கல‌ந்தா‌ய்‌வி‌ல் சுயநிதி மருத்துவ கல்லூரி இடங்கள் முதல்கட்ட கல‌ந்தா‌ய்‌வில் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு 2ம் கட்ட கல‌ந்தா‌ய்‌விற்கு அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கல‌ந்தா‌ய்வு‌ம் உடனடியாக தொடங்காமல் 34 நாட்கள் இடைவெளி விட்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த காலதாமதத்தை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நிகர்நிலைப் பல்கலைக் கழக தகுதியை பெற்று விட்டது. இதனால், அந்த கல்லூரியில் இந்த ஆண்டு கிடைக்க வேண்டிய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்காமல் போய் விட்டது.

பி.சி, எம்.பி.சி மற்றும் எஸ்.சி, மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் அந்த கல்லூரியில் பெறவிருந்த 70 இடங்கள் பறிபோயிருக்கிறது. அந்த இடங்கள் இப்போது ஏலம்போய்க் கொண்டு இருக்கிறது. இந்த இழப்புக்கு யார் பொறுப்பு?

இந்த ஆண்டு, சுயநிதிக் கல்லூரிகளுக்கான இடங்களை 2ம் கட்ட கல‌ந்தா‌ய்‌வை தள்ளி வைத்தது ஏன்? தள்ளி வைக்கச் சொன்னவர் யார்? 2ம் கட்ட கல‌ந்தா‌ய்வு‌ம் உடனடியாக நடத்தி முடிக்காமல் ஒரு மாதத்துக்கு மேல் காலதாமதம் செய்யப்பட்டது ஏன்? இதற்கு யார் பொறுப்பு? இவை தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, பிரச்னையை திசை திருப்பாமல் இதற்கெல்லாம் காரணமானவர்கள் யார்? 97 இடங்கள் பறிபோனதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதையும் அதன் பின்னணியையும் கண்டறிய, முழுமையான விசாரணை நடத்த அரசு முன்வர வேண்டும்'' எ‌ன்று ராமதா‌‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil