''சென்னை மாநகராட்சி மூன்று மாநகராட்சியாக பிரிக்கப்படும்'' என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது தொடர்பாக தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க பரிந்துரை செய்துள்ளது என்றார்.
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறை, அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, தெற்கே தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தாம்பரம் மாநகராட்சி, வடக்கே அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பத்தூர் மாநகராட்சி என்று இரண்டு புதிய மாநகராட்சியை உருவாக்க பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளது. சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிப்பது தொடர்பாக, அடுத்து 2011ஆம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மாநகராட்சி சென்னை மாநகராட்சி. இது 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
1921 ஆம் ஆண்டு 5 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது சுமார் 42 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல் 27.6 சதுர மைலாக இருந்த பரப்பளவு தற்போது 174 சதுர கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.