தமிழக அரசு செயல்படுத்தி வரும் இலவச கலர் டிவி திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கில், மத்திய அரசு, தமிழக அரசு, தி.மு.க. ஆகியவற்றுக்கு தாக்கீது அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் ரூ.2400 கோடி செலவில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர் எஸ். சுப்ரமணிய பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.
இதை எதிர்த்து சுப்ரமணிய பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீது இன்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விவாதம் நடந்தது.
மனுதாரர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், "இலவச கலர் டிவி திட்டம் அரசமைப்புச் சட்ட விதி 282-ஐ மீறுவதாகும். அரசு நிதி பொதுக் காரணங்களுக்காகத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட நோக்கத்துக்காக பயன்படுத்தக் கூடாது. மேலும் இது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சம்" என்றார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், 'கிராமப்புற மக்களின் அறிவை மேம்படுத்தவும், அவர்கள் உலக விடயங்களை அறிந்து கொள்ளவும் டிவி உதவும்' என்றதுடன், 'டிவியை ஆடம்பரப் பொருள் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?' என்று கேள்வி எழுப்பினர்.
இதை மறுத்த வழக்கறிஞர் அரவிந்த் 'இதுபோன்ற திட்டங்களை அனுமதித்தால் அரசு பணத்தை தனிப்பட்ட நோக்கத்துக்காக பயன்படுத்துவதற்கு அளவே இல்லாமல் போய்விடும்' என்றும், 'இதற்கு ஒரு வரையறை இல்லையென்றால் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு அரசு பணத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது' என்றும் கூறினார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் தி.மு.க. ஆகியவற்றுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.
தனிப்பட்ட பயன்பாட்டிற்கு வரிப் பணத்தைச் செலவிடுவது அரசமைப்புச் சட்டப்படி சரியானதுதானா என்பதை நீதிமன்றம் ஆராயும் என்றும், இந்தத் திட்டத்தில் அரசமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலிப்போம் என்றும் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு கூறியது.