தீவிரவாதிகள் மிரட்டல் காரணமாக இந்த முறை சுதந்திர தின விழாவின் போது எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி. ஜெயின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை மறுதினம் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைமைச் செயலகம் அருகே இன்று நடைபெற்ற சீருடை அணிவகுப்பு ஒத்திகையை காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி. ஜெயின் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தீவிரவாதிகள் மிரட்டல் காரணமாக இந்த முறை சுதந்திர தின விழாவின் போது எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் செல்லும் வாகனம் கார் குண்டு துளைக்காத வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள கொத்தளத்தில் முதல்வர் கொடி ஏற்றும் இடமும், உரையாற்றும் இடமும் குண்டு துளைக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ரயில் நிலைங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறினார்.