தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டக்கல்லூரி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், திருச்சி, திருநெல்வேலி சட்ட கல்லூரி மாணவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சேலம் சட்ட கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்க அரசு ஆணையிட்டுள்ளது.
இதேபோல், தஞ்சாவூரைச் சேர்ந்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சட்ட கல்லூரி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சட்ட கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சட்ட கல்லூரி தொடங்குவதற்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் அளிக்க மறுத்த நிலையில், அப்பல்கலைக்கழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகி சட்ட கல்லூரி தொடங்க அனுமதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் பல்கலைக்கழகம் சட்ட கல்லூரி தொடங்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் இந்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு மாணவர்களின் உணர்வுகளை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.