ராமேஸ்வரத்தில் இன்று ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமும், பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்று முன்தினம் கடுமையாக கடல் சீற்றம் ஏற்பட்டது. பலத்த காற்றினால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.
இந்த நிலையில் இன்றும் ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 200க்கும் மேற்பட்ட நாட்டு, விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்று வீசிக் கொண்டு இருப்பதால் தனுஷ்கோடி செல்லும் சாலைகள் மணலால் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.