'வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தபால் ஊழியர்களை பயன்படுத்தலாம்' என்று தமிழக பா.ஜ. தலைவர் இல.கணேசன் யோசனை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எல்லா வாக்காளர்களும் கட்டாயமாக வாக்களிக்கும் வகையில் சட்டத் திருத்தம் வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் பேசியுள்ளார். இது விவாதத்துக்குரியது; ஆனால் பரிசீலனைக்குரியது. வாக்களிக்காதவர்களுக்கு தண்டனை வழங்குவது என்றால் என்ன தண்டனை?
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையும் பெற்ற பிறகு வாக்களிக்க செல்லும் பலரது பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடுகிறதே, அதைச் செய்த தேர்தல் ஆணையத்துக்கு என்ன தண்டனை?
வாக்காளர் பட்டியலில் எல்லாருடைய பெயரையும் இடம் பெறச் செய்து, அவர்களுக்கு முறையான அடையாள அட்டையும் வழங்கி, அவர்கள் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்பதை 99 விழுக்காடு நிறைவேற்றிய பிறகு, கட்டாய வாக்களிப்பை தேர்தல் ஆணையம் வற்புறுத்த இயலும். இதற்கு அடிமட்டம் வரை கட்டமைப்பு தேவை.
கிராமங்கள், குக்கிராமங்கள் வரை முழு கட்டமைப்பு கொண்ட ஒரே மத்திய அரசு நிறுவனம் அஞ்சல் நிலையங்கள்தான். இப்போது, அஞ்சல் நிலையங்களை பயன்படுத்துவது குறைந்து வருகிறது. எனவே, கிளை அஞ்சலகங்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டு, அவர்களது சம்பளமும் உயர்த்தப்படாத நிலையில், அவர்களுக்கு அதிக பணி நேரம் ஒதுக்கி அதிக சம்பளம் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று இல.கணேசன் கூறியுள்ளார்.