தமிழக மக்களின் நலன் கருதியாவது தி.மு.க.வின் தலைமையிலான கொள்கைக் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட்டுகள் பிரிந்து செல்லக் கூடாது என்றும் தோழமை சுடரை அணையாமல் காப்போம் என்றும் முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைஞரின் சட்டப்பேரவை உரைகள் மற்றும் 'மீசை முளைத்த வயதில்' ஆங்கில மொழியாக்கம் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் குறித்து சட்டப் பேரவையில் கடந்த 1971-ம் ஆண்டிலேயே வலியுறுத்தினேன். எப்பாடு பட்டாவது சேது திட்டத்தை தி.மு.க அரசு நிறைவேற்றும். தமிழக மீனவர்களின் இன்னுயிரைக் காக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். கச்சத்தீவு குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தி.மு.க வலியுறுத்தி வருகிறது.
சேதுசமுத்திர திட்டம் மாத்திரமல்ல, இன்னும் பல கச்சத்தீவை திரும்பப்பெறும் திட்டங்கள் போன்றவை அன்றைக்கே தீர்மானமாக முன் மொழியப்பட்டு, ஏகமனதாக வழிமொழியப்பட்டவை. அப்போது சில பிரச்சினைகள் இருந்தாலும்கூட அதைப்பற்றி மத்திய அரசு மீண்டும் பரிசீலித்து கச்சத்தீவு பிரச்சினையிலே ஒரு நல்ல முடிவை ஏற்படுத்த முன் வரவேண்டும்.
இங்கு இத்தனை கட்சிகளையெல்லாம் நாம் அழைத்திருப்பதற்குக் காரணம், இது தேர்தல் பயம் காட்டுவதற்காக அல்ல. தேர்தலிலே பார், பார் நாங்களெல்லாம் ஒன்று சேர்ந்து விட்டோம் என்று இப்போதே யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. நாங்கள் யாரையும் பயமுறுத்துபவர்கள் அல்ல, யார் பயமுறுத்தினாலும் பயப்படுபவர்களும் அல்ல
எனக்கு உரிமை இருந்தாலும், உங்களில் யாரையும் நான் கசக்கிப் பிழிய விரும்பவில்லை. அனைத்து மக்களையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். இது நமது தோழமை. நாம் அரும்பாடுபட்டு வளர்த்தது. இந்த தோழமை தியாக தீபம். இந்த தியாகச் சுடர் அணையாமல் நாம் ஒன்றுபட்டு காப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.