ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 2012-ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் புளோரைடு கலந்த நீரைக் குடிப்பதால் பாதிக்கப்படுகிறார்கள் எனவே, அவர்களுக்குக் காவிரி நீரை வழங்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
அதில், "கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.1334 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினால் 3 நகராட்சிகள், 17 நகரப் பஞ்சாயத்துக்கள், 6785 கிராமங்கள் பயன்பெறும்.
முதல்வர் கருணாநிதி 26.2.08 இல் அடிக்கல் நாட்டிய இந்தத் திட்டத்திற்கு ஜப்பான் நாடு நிதியுதவி செய்கிறது. 10.3.08 இல் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து அதிகாரிகளின் ஆய்வுப் பணிகள் துவக்கப்பட்டன. 11.2.08 இல் தனி அலுவலகம் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தற்போது துவங்கி நடந்து வருகிறது. 2012 ஆம் ஆண்டிற்குள் திட்டப் பணிகள் முழுவதும் முடிந்துவிடும்" என்று அரசு தெரிவித்துள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யாய, வேணுகோபால் ஆகிய இருவரும், அரசின் பதில் மனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து வழக்கை முடித்தனர்.