ஈரோட்டில் அக்கா, தங்கை நீரில் மூழ்கி சாவு!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு அருகே உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் குளிக்க சென்ற அக்காள், தங்கை ஆகியோர் நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி இறந்தனர். துக்கம் விசாரிக்க உறவினர் வீட்டிற்கு வந்தபோது இந்த கோர சம்பவம் நடந்தது.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல். இவர் மனைவி ராதாமணி. இவர்களது மகள் புவியா (11). ராதாமணியின் அக்காள் வளர்மதி. இவரது மகள் சரண்யா (18) இவர் ஈரோடு அரச்சலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்களது தாத்தா ஈரோடு அருகே உள்ள பெருமாள்மலையில் இறந்து விட்டார். இவரது சடங்கிற்காக இவர்கள் பெருமாள்மலைக்கு வந்தனர். அப்போது காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். ராதாமணியும், வளர்மதியும் வாய்க்காலின் கரையில் துணிகளை துவைத்து கொண்டிருந்தனர்.
அப்போது சரண்யாவும், அவளது தங்கை புவியாவும் வாய்க்காலில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்றதால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்த ராதாமணி தண்ணீருக்குள் இறங்கி இவர்களை காப்பாற்ற சென்றார். இவரையும் தண்ணீர் இழுத்து சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற ஓட்டுனர் பணியில் இருக்கும் பாஷா என்பவர் ராதாமணியை காப்பாற்றினார்.
சரண்யா உயிருக்கு போராடும் நிலையில் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் வழியிலேயே சரண்யா இறந்தார். புவியா உடல் கிடைக்காததால் பவானி தீயனைப்பு வீரர்கள் வந்து பாறைக்கடியில் சிக்கி இருந்த புவியாவின் உடலை மீட்டனர்.
இறந்த சரண்யா, புவியாவை பார்த்து அவர்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்ணீர் வரவைத்தது.