தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம்சாற்றியுள்ளார்.
தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ அஞ்சாமல் சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வருவது தமிழகத்தில் தொடர்கிறது. ஏற்கனவே எங்கள் கட்சியை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இப்போது நீதிமன்ற வளாகத்திலேயே ராமலிங்கம் தாக்கப்பட்டுள்ளார்.
எங்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவது பற்றி முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றும், தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. காவல் துறையில் ஒரு பகுதியினர் சமுக விரோதிகளோடு கூட்டு வைத்துள்ளனர். ஒரு சில அரசியல் வாதிகள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.
இனிமேல் தாக்குதல் நடந்தால், நாங்கள் மனு போட்டுக்கொண்டு இருக்க மாட்டோம். சுயமாக நாங்களும் நடவடிக்கை எடுப்போம். எங்கள் கட்சியை சேர்ந்த சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டிருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்று தா.பாண்டியன் குற்றம்சாற்றினார்.