"பா.ம.க., தி.மு.க.வோடு இருந்த போது இரண்டு கட்சிகளின் சார்பிலும் நடைபெற்ற விழாக்களில் நான் கலந்து கொண்டதால் எப்படி காலம் வீணடிக்கப்படவில்லையோ, அது போல இப்போதும் காலம் வீணடிக்கப்படவில்லை" என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:
கலைத்துறை விழாக்களில் காலத்தை வீணடிப்பதாக டாக்டர் ராமதாஸ் புகார் சொல்கிறாரே?
பாட்டாளி மக்கள் கட்சி, தி.மு.க.வோடு உறவு கொண்டிருந்த போது தி.மு.க. சார்பிலும், பா.ம.க. சார்பிலும், அரசு சார்பிலும் நடைபெற்ற விழாக்களில் நான் கலந்து கொண்டதால் எப்படி காலம் வீணடிக்கப்படவில்லையோ, அது போல இப்போதும் காலம் வீணடிக்கப்படவில்லை.
திரைப்படத் துறை தொடர்புடைய விழாக்களில் முதலமைச்சர் அதிகமாகப் பங்கேற்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறதே?
திரைப்பட நிகழ்ச்சிகளிலே, கலை விழாக்களிலே கலந்து கொள்வது என்பது பாபகரமான காரியமா? அவற்றையன்றி நான் வேறு நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்வதே கிடையாதா? தற்போது தானே இரண்டு நாட்கள் தென் மாவட்டங்களுக்குச் சென்று தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சி மன்றமாக மாறிய நிகழ்ச்சியிலும், மதுரையில் பண்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியிலும், பத்மஸ்ரீ டி.எம்.சவுந்தரராஜன் பாராட்டு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வந்துள்ளேன்.
இன்றைக்குக்கூட ஆவடியில் நடைபெறுகின்ற ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின்கீழ் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், நகராட்சி புதிய அலுவலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் 3,000 இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ளவிருக்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆதரவாளர் தயாரித்து, டாக்டர் ராமதாசும் சில காட்சிகளில் தோன்றிய "இலக்கணம்'' திரைப்படத்தைப் பார்க்க ராமதாசும், அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களும் என்னை வலிந்து வலிந்து அழைக்கவில்லையா? அந்தப் படத்தை நான் பார்த்தால் மட்டும் பரவாயில்லையா?
சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் தாங்கள் திரைப்படத் துறைக்காக அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பிரச்சாரம் செய்து வருகிறார்களே?
நான் ஏற்கனவே எழுதி புத்தகங்களாக வெளி வந்துள்ள கதைகளை, கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் திரைப்படங்களாக எடுக்க என்னை அணுகிக் கேட்கிறார்கள். அந்தக் கதைக்கான திரைக்கதை, உரையாடல் போன்றவற்றை அவர்களே எழுதிக் கொண்டு, கதையை மாத்திரம் திரைப்படம் எடுக்கின்ற உரிமையை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
அந்த முறையில் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே ``மண்ணின் மைந்தன்'', ``கண்ணம்மா'' ஆகிய படங்களுக்கான உரிமையை சிலருக்கு வழங்கினேன். அதற்காக எனக்கு வழங்கப்பட்ட ரூபாய் 21 லட்சத்தை, சுனாமி நிவாரணப் பணிகளுக்காக அப்போதே அரசுக்கு வழங்கி விட்டேன். இந்தச் செய்தி அப்போதே பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது.
இப்போது கூட வெளி வந்துள்ள ``உளியின் ஓசை'' என்ற திரைப்படத்திற்காக நான் தொடக்கம் முதல் இறுதி வரையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கவில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்பு நான் ``முரசொலி'' யில் எழுதி தொடர்கதையாக வெளி வந்த ``சாரப்பள்ளம் சாமுண்டி'' என்ற சரித்திரக்கதையை ``ஜெ.நந்தினி ஆர்ட்ஸ்'' பட நிறுவனத்தினர் என்னிடத்திலே 25 லட்சம் ரூபாய் காசோலை கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.
அந்தக் கதைக்காக மட்டும் நான் பெற்ற 25 லட்சம் ரூபாயை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன் கொடுத்து, அதை திரைப்படத் துறையிலே உள்ள நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த ரூ.25 லட்சத்துக்கான வருமான வரியாக ரூ. 7 லட்சம் முறையாக செலுத்தப்பட்டுள்ளது.
நான் ஏற்கனவே எழுதி புத்தக வடிவில் வந்துள்ள கதைகளைக் கூட வேறு சிலர் படங்களைத் தயாரிப்பதற்காக என்னிடம் கேட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். அதற்குரிய விலையைப் பெற்றாலும் கூட, அந்தத் தொகையையும் இப்போது அளித்ததைப் போல மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற வகையில்தான் அதுவும் அளிக்கப்படுமே தவிர, என்னுடைய சொந்தப் பயன்பாட்டிற்காக அதனை நான் எடுத்துக் கொள்வதாக இல்லை.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.