சுதந்திர தின ஒத்திகையையொட்டி ஆகஸ்ட் 11, 13 ஆகிய தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காவல் துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் விழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் 11, 13 ஆகிய தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஒத்திகை நடைபெறும் இரண்டு நாட்களிலும் காலை 6.30 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்க்கண்ட சாலைகளில் தற்பொழுது நடைமுறைகளில் உள்ள போக்குவரத்து கீழ்க்கண்ட வகைகளில் மாற்றி அமைக்கப் படவுள்ளது.
நேப்பியர் பாலத்திலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை, கொடி மரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, இராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.
அதே போல், பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, சுவாமி சிவானந்தா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.
முத்துசாமி பாலம், அண்ணாசாலை பாரிமுனை, காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, இராஜா அண்ணாமலை மன்றம் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையையும், அண்ணாசாலை சுவாமி சிவானந்தா சாலை வழியாக காமராஜர் சாலையும் வந்தடையலாம். வாகன ஓட்டிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.