மாநில வேலை உறுதி திட்டத்தின் நான்காவது கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடந்த மார்ச் 3ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீதான மேல்நடவடிக்கை குறித்தும், மாநில வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகள், வழங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள், திட்ட நிதி பயன்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஊரக விலைப் பட்டியல், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குறைந்த அளவு 30 விழுக்காடு குடும்பங்களை பதிவு செய்திட வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு பணியின் மதிப்பும் ரூபாய் 3 லட்சத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஒப்பந்ததாரர்கள் தவிர்க்கப்படுதல், ஊராட்சி ஒன்றிய வாகனம் ஒவ்வொன்றுக்கும் மாதம் 50 லிட்டர் கூடுதல் எரிபொருள் வழங்குதல், பிரத்தியேகமாக மாவட்ட, வட்டார மற்றும் கிராம ஊராட்சி நிலையில் 2579 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, வேலைஅட்டை, பதிவேடுகள், வருகைப் பட்டியல் ஆகியவற்றை முறைப்படுத்தப்படும்.
ஊதிய நிலுவை தொகை பெற தனி நபர்களுக்கு வங்கி கணக்குகள் துவக்குதல், சமூக தணிக்கை, வாராந்திர அறிக்கை, அலுவலர்கள் மூலம் தொடர் ஆய்வு மேற்கொள்ளல், மாநில வேலை உறுதி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தல் போன்ற சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.