மதுரையில் வீடுகளை இழந்த தலித் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி கொடுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுக்கமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '''மதுரை மேலவாசல் பகுதியில் 150 குடும்பம் கொண்ட தலித் மக்களுக்கு அவர்களின் குடிசைகளை அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்தில் குடிசை மாற்று வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதற்காக கடந்த ஜனவரி மாதம் நிலம் கையகப்படுத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை ஏழு மாதங்கள் ஆகியும் அந்த இடத்தில் கட்டுமானப் பணியை குடிசை மாற்று வாரியம் தொடங்காமலேயே வைத்துள்ளது. அதற்குக் காரணமாக மதுரை மாநகராட்சியிடமிருந்து பெறப்பட்ட அந்த இடத்திற்கு மதுரை மாநகராட்சியால் இன்னும் கிரயம் நிர்ணயிக்கப்படவில்லை என்கிற காரணத்தை சொல்லி காலம் தாழ்த்தி வருவதாக தெரிய வருகிறது.
அரசு துறைகளான மாநகராட்சியும், குடிசைமாற்று வாரியமும் மெத்தனமாக இருந்து வருவதால், அங்கு குடியிருந்து வந்த 150 தலித் குடும்பங்கள் நகரிலிருந்து வெகு தூரத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு தினந்தோறும் வேலைவாய்ப்பு கிடைப்பது கடினமாக உள்ளது.
எனவே, இந்த பிரச்சனையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தலித் மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.