''திட்டமிட்டப்படி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்'' என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் புதிய சட்டப்பேரவை வளாகம் பற்றிய ஆலோசனை கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், அரசினர் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கம் மற்றும் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு இடையே உள்ள காலியிடத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வறைகள் நவீன முறையில் கட்டப்பட உள்ளன.
இந்த வளாகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஒரே இடத்தில் நிறுத்தப்படக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளது என்றார்.
பின்னர் செய்தியாளர்கள், ஒகேனக்கல் கர்நாடகத்துக்கு சொந்தம் என்றும் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கர்நாடக அமைச்சர் ஒருவர் கூறி இருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "ஒகேனக்கல் குடிநீர் திட்டம் ஏற்கனவே திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.