''நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்படும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் காங்கிரசுக்கு பெரும் சரிவு ஏற்படும் என்று தா.பாண்டியன் கூறினார்.
தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்வது குறித்து தேர்தலின்போது தீர்மானிக்கப்படும் என்று கூறிய அவர், இப்போது தி.மு.க.வுடன் முரண்பாடு அதிகமில்லை என்றார்.
சர்வதேச அளவில் பெட்ரோல் விலை குறைந்த பின்னரும், மத்திய அரசு விலையை குறைக்காதது, விலைவாசி உயர்வு குறித்து அக்கறை இல்லாததையே காட்டுகிறது என்று குற்றம்சாற்றிய தா.பாண்டியன், தமிழகத்தில் தொடர் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல்கள் அதிகரித்திருப்பது காவல்துறையையே கேள்விக்குறியாக்கி உள்ளது என்றும் கூலிப்படைகள் மூலம் நடைபெறும் இதுபோன்ற வன்முறைகளை கண்டித்து தி.மு.க அல்லாத தோழமை கட்சிகளுடன் சேர்ந்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.