''இரண்டரை ஆண்டு காலத்தில் சினிமா பார்ப்பதிலும், சின்ன சின்ன சினிமா விழாக்களை பலமணி நேரம் அமர்ந்து கண்டுகளிப்பதிலும் பொழுதைக் கழித்திருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உச்ச நீதிமன்றம் அண்மையில் தமிழக முதல்வர் மீதும், மத்திய அமைச்சர் மீதும் கண்டனம் தெரிவித்திருப்பது தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகும் என்று கூறிய ராமதாஸ், நீதிமன்ற கட்டளையை ஏற்று உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யாதது அரசின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது. இதில் அப்பாவி வழக்கறிஞர்கள் பலிகடா ஆகியுள்ளனர் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
மதுரையில் நடந்த விழாவில் பத்து அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் கோப்புகள் ஒரு லட்சத்துக்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அமைச்சர்கள் சென்னையில் இருந்தாலும், தலைமைச் செயலகத்துக்கு செல்வதில்லை. அப்படியே சென்றாலும் கோப்புகளை பார்ப்பதில்லை என்று ராமதாஸ் குற்றம்சாற்றினார்.
இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் சினிமா பார்ப்பதிலும், சின்ன சின்ன சினிமா விழாக்களை பலமணி நேரம் அமர்ந்து கண்டுகளிப்பதிலும் பொழுதைக் கழித்திருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி என்று குற்றம்சாற்றிய ராமதாஸ், சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது என கூறமாட்டேன். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல என்றார்.
''ஒகேனக்கல் பகுதியை ரீசர்வே செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகிறார். அப்படியானால் தமிழர்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளையும் ரீசர்வே செய்ய வேண்டும். திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் குறிப்பாக கருணாநிதியின் ஆட்சியில் மண்ணையும், நீர் உரிமையையும் இழந்து நிற்கிறோம்'' என்று கூறிய ராமதாஸ், எந்த மாநிலத்தினுடனான பிரச்சனையிலும் தமிழகத்தின் உரிமையை கருணாநிதி நிலைநாட்டியது கிடையாது என்றார்.