''சுதந்திர தின விழா அன்று 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்'' என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சென்னையில் சைக்கோ கிடையாது என்று எவ்வளவோ எடுத்துக் கூறினோம். ஆனால் சிலர் கேட்காமல் சைக்கோ என தகவல் பரப்பினர். அவர்களை குறைசொல்ல விரும்பவில்லை. வருங்காலத்திலாவது காவல்துறையோடு ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாமல் தடுத்து நிறுத்தும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளோம். பொதுமக்கள் 24 மணி நேரமும் காவல்துறையினரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
சுதந்திர தினம் அன்று 15,000 காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது நடமாடினாலோ அல்லது சுற்றித்திரிந்தாலோ அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது தங்கியிருந்தால் அவர்களை பற்றி தகவல் தெரிவிக்குமாறு விடுதிகள் மற்றும் ஓட்டல்களின் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.
கடந்த ஒரு மாதத்தில் சென்னையில் 23 வழக்குகள் பதிவு செய்து 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.30,07,000 மதிப்புள்ள நகை, பணம் மீட்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் சேகர் கூறினார்.