ஆள் கடத்திய வழக்கில் சிக்கிய அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் ஆளுநர் பர்னாலா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி ஆகியோர், சொத்துக்காக கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா எங்களை கடத்தினார் என்று நீதிமன்றத்தில் பகிரங்கமாக குற்றம்சாற்றினர்.
இது தொடர்பாக பதில் அளிக்கும்படி அமைச்சருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் மனித உரிமை ஆணையத்தில் அமைச்சர் மீது புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.