சென்னையில் தொடர்ந்து மர்ம கொலைகள் நடந்து வருவதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.இ.அ.தி.மு.க சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென் சென்னை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும், காவல் துறைக்கும் எதிரான கோஷங்களை அ.இ.அ.தி.மு.க.வினர் எழுப்பினர்.
கண்டன வாசகங்கள் அடங்கிய அட்டையையும், அ.இ.அ.தி.மு.க கொடிகளையும் ஏந்தி பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மதுசூதனன் பேசுகையில், ''கொலை நகரம் என்று தமிழகத்தின் தலைநகரான சென்னையை சொல்லக்கூடிய அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. இத்தகைய அராஜக ஆட்சிக்கு மக்கள் வெகு விரைவில் முடிவு கட்ட வேண்டும்'' என்று கூறினார்.