ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் சிறிலங்க கடற்படையினரின் அத்துமீறியச் செயலைக் கண்டித்து, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததன் விளைவாக மீனவர்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள முடியாத அளவிற்கு சிறிலங்க கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி தங்கள் பகுதிக்குள் மீன்பிடிக்க நுழைவதாக பழி சுமத்தி, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடும் நிகழ்ச்சிகளை அன்றாடம் அரங்கேற்றி கொண்டிருக்கும் சிறிலங்க கடற்படையினரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஒரு மிகப்பெரிய தொழிலை தமிழ்நாடு இழக்க வேண்டி வரும். சிறிலங்க கடற்படையினரின் இதுபோன்ற தொடர் தாக்குதலை இனி சகித்துக் கொள்ள முடியாது. தமிழக மீனவர்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளை அ.இ.அ.தி.மு.க மேற்கொள்ளும்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் சிறிலங்க கடற்படையினரின் அத்துமீறியச் செயலைக் கண்டித்து, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமேஸ்வரம், பாண்டியன் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.