தமிழ்நாடு சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் அய்யணன் அம்பலம் மனைவி மகமாயி என்ற கருப்பாயிக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினையும் 1.4.2007 முதல் 31.7.2008 வரையிலான ஓய்வூதியம் நிலுவைத் தொகை ரூ.48 ஆயிரத்துக்கான காசோலையை கருப்பாயிக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று நேரில் வழங்கினார். இந்த ஓய்வூதியம் மாதந் தோறும் ஓய்வூதியரின் வங்கி சேமிப்பு கணக்கில் நேரில் செலுத்தப்படும்.
ஓய்வூதியம் பெற்ற மகமாயி என்கிற கருப்பாயி தனது கணவர் அய்யணன் அம்பலம் 1970 முதல் 1976 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றியதை நினைவு கூர்ந்து, தனது நிதி நிலைமையை கருத்திற் கொண்டு தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கிய முதலமைச்சர் கருணாநிதிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.