சென்னையில் நிகழ்ந்து வரும் மர்மக் கொலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடியாத தி.மு.க அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்தும், கொலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து மக்கள் மனதில் நிலவி வரும் அச்ச உணர்வுகளை நீக்க வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க சார்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்டோர் சென்னையின் மையப் பகுதிகளில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக சென்னை மாநகரில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. கொலைகளுக்கு காரணமானவர்களை காவல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
இரவு நேரங்களில் காவல் துறையினர் சுற்றி வந்தாலும், கொலைக்கு காரணமானவர்களை காவல் துறையினர் கண்டுபிடிக்காததால் பொதுமக்களிடையே ஒருவிதமான அச்ச உணர்வு காணப்படுகிறது. காவல் துறையின் கையாலாகாத்தனத்தினால் இரவுக் காவலாளிகளாக பணியாற்றியவர்கள், அச்சம் காரணமாக தங்கள் வேலைகளை ராஜினாமா செய்து விட்டனர்.
தொடரும் மர்மக் கொலைகள் பற்றி துப்பு கிடைக்காமல் காவல் துறையினர் திணறுகின்றனர். காவல்துறை என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு காவல்துறையின் போக்கு உள்ளது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரைப்படங்களை பார்த்துக் கொண்டும், ஆபாசமான கருத்துக்களை இளைய சமுதாயத்திற்கு வழங்கிக் கொண்டும், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வைத்து அதன் மூலம் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தர முனைப்புக் காட்டுவதிலும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தி வருகிறார்.
சென்னையில் நிகழ்ந்து வரும் மர்மக் கொலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடியாத தி.மு.க அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்தும், உடனடியாக மர்ம கொலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, மக்கள் மனதில் தற்போது நிலவி வரும் அச்ச உணர்வுகளை நீக்க வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.