தமிழகத்தின் 10-வது மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி எஸ்.ஏ.வி.மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை முறைப்படி தூத்துக்குடி மாநகராட்சியை தொடங்கி வைத்து, அதற்கான நினைவுத் தூணை திறந்து வைத்தார்.
தமிழக ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி, சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் கஸ்தூரி தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன், தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என்.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராணி வெங்கடேசன், டி.செல்வராஜ் ஆகியோரும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொழில் நகரான தூத்துக்குடி மாநகராட்சியாக்கப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போதுள்ள நகராட்சியோடு சுற்றியுள்ள 10 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டு தூத்துக்குடி தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக இன்று உதயமானது.