கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு ஒகேனக்கல் பிரச்சனை பற்றி பேசலாம் என்று கூறிய கருணாநிதி, தற்போது தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ரஜினிகாந்த் நடித்து அண்மையில் திரையிடப்பட்ட 'குசேலன்' படத்துக்கு அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ரஜினிகாந்த் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததை கண்டித்து ரஜினி படம் ஓடும் தியேட்டர்களை மற்றும் அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாக இளைஞர் காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகள் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
ஒகேனக்கல் பிரச்சனைக்காக முதலமைச்சர் கருணாநிதி கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பிறகு இப்பிரச்சனைகள் பற்றி பேசலாம் என்று அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைத்து பல மாதங்கள் ஆகியும் இது குறித்து கருணாநிதி வாய் திறவாமல் மௌனம் சாதிப்பது ஏன்?
தமிழர்களின் நலனுக்காக வீட்டை முற்றுகையிடுவதாக இருந்தால் காங்கிரசார், கருணாநிதி வீட்டைத் தானே முற்றுகையிட வேண்டும். திருமாவளவன் பிறந்த நாள் ஆகஸ்ட் 17ஐ தமிழர் எழுச்சி நாளாக நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விளம்பரத்தில் அயல்நாட்டவர்களான சேகுவேரா, தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் படங்களை எல்லாம் போட்டு தங்களுடைய எல்லை கடந்த தேசபக்தியை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள்.
இதை எல்லாம் கண்டிக்க வக்கற்ற காங்கிரஸ், ரஜினிகாந்தை சாடுவது வெட்கக் கேடு, ராஜீவ் காந்தி கொலை சரிதான் என்று இவர்கள் ஒப்புக் கொள்வது போல இது அமைந்திருக்கிறது. தங்கபாலு, இளங்கோவன், வாசன் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சிக்காரர்கள் ஜனநாயக விரோதமாகச் செயல்படுவதை கண்டிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?'' என்று ராமகோபாலன் கூறியுள்ளார்.