தமிழக முதலமைச்சர் கருணாநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒரு நாள் பயணமாக மதுரை வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சியை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் கருணாநிதி, மைசூர் விரைவு ரயில் மூலம் இன்று இரவு மதுரை வருகிறார். பின்னர் அரசு சுற்றுலா விடுதியில் இன்று இரவு முழுவதும் தங்குகிறார்.
இதையடுத்து நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், சொக்கிகுளம் ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருக்கும் மறைந்த தி.மு.க. தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை அவைத்தலைவருமான பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார்.
பின்னர் அன்று மாலை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் பிரபல பிண்ணனி பாடகர்களான டி.எம். செளந்தர் ராஜன், பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார்.
சமீபத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விடுக்கப்பட்ட தீவிரவாத அச்சுறுத்தலையடுத்து முதலமைச்சர் கருணாநிதிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் கருணாநிதியின் வருகையையொட்டி பாதுகாப்புக்காக 3,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் கருணாநிதி தங்க உள்ள அரசு சுற்றுலா விடுதி, அவர் செல்லும் பாதை, விழா நடைபெறும் பகுதி முழுவதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாசவேலைக்கெதிரான சோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை நகரின் 14 நுழைவு வாயில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.