மதுரை மாவட்டம் மேலுரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற இந்த இரட்டைக் கொலை தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றம் எந்தவித சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதாக மாவட்ட அமர்வு நீதிபதி அய்யப்பன் இன்று தனது தீர்ப்பில் கூறினார்.
மேலூர் அருகே உள்ள சென்னகிராமபட்டி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுப்பது தொடர்பாக இரண்டு சாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
இதையடுத்து காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதில் கலவரத்தில் பங்கேற்ற இரு தரப்பினரும் பங்கேற்றனர்.
இதற்கிடையே, ஒரு பிரிவைச் சேர்ந்த அமாவாசை, வேலு என்ற இருவரும் தங்கள் கிராமத்துக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது மற்றொரு பிரிவினரால் வழி மறித்து தாக்கப்பட்டனர். இதில் இரண்டு பேரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர்.
இந்த இரட்டைக் கொலைத் தொடர்பாக 27 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கெதிராக மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்து விட்டார். இந்த வழக்கில்தான் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.