''அரசு கேபிளுக்கு சேனல் கொடுக்க மறுக்கும் 3 தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் ஏற்கனவே அறிவித்தபடி அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களை நிர்மாணித்து தஞ்சையில் கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கி அதன் மூலம் வீடுகள் தோறும் கேபிள் இணைப்புகள் வழங்கும் பணி கடந்த ஜூலை 15ஆம் அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தனது வாடிக்கையாளர்களுக்கு 73 தொலைக்காட்சி சேனல்களை வீடு ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.
சன்குழுமம், சோனி தொலைக்காட்சி மற்றும் ஸ்டார் குழுமம் ஆகியவற்றை சார்ந்த தொலைக்காட்சி சேனல்களைப் பெறுவதற்கான முயற்சிகளை அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்ந்து எடுத்து வருகிறது என்றாலும், முறைப்படி மற்ற தொலைக்காட்சி சேனல்களிடம் அனுமதியைப் பெற்றதைப்போல இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து அனுமதியைப் பெற நேரடிப் பேச்சுவார்த்தை மூலமாகவும், எழுத்து வடிவிலான விண்ணப்பம் மூலமாகவும் நடவடிக்கை மேற்கொண்டும் கூட சன் குழுமம் உள்ளிட்ட இந்த மூன்று நிறுவனங்கள் 'டிராய்' விதிக்கு நேர்மாறாக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு தமது சேனல்களை வழங்க மறுத்து வருகின்றன.
எனவே அந்த மூன்று நிறுவனங்களின் சேனல்களை பெறுவதற்கு மத்திய அரசின் சட்டப்படி அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.