தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து ஏழை மாணவர்களுக்கான பெறப்படும் 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர புதுச்சேரி சட்டப்பேரவையில் உடனடியாக சட்டம் இயற்ற கோரி அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகள், துவங்கப்பட்டு ஓராண்டிற்கு பிறகு அரசியல் ஆட்சியாளர்களை கைக்குள் வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு ஒதுக்குவதில்லை.
இந்த மாநிலத்தில் இயங்கி வரும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 900 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடாக அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் 50 விழுக்காடு இடங்களை, அதாவது 450 இடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டவை 311 இடங்கள் மட்டுமே. இது மேலும் குறைந்து இந்த ஆண்டு 233 இடங்கள் என்ற அளவிற்கு மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு இடங்களை ஒதுக்கியுள்ளன.
எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து ஏழை, எளிய மாணவர்களுக்காக பெறப்படும் 50 விழுக்காடு இடங்களை பெறாத காங் கிரஸ் அரசைக் கண்டித்தும், 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர புதுச்சேரி சட்டப் பேரவையில் உடனடியாக சட்டம் இயற்ற வலியுறுத்தியும், அரசு மருத்துவக் கல்லூரியை தாமதமின்றி உடனடியாக கட்ட வலியுறுத்தியும், அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 6ஆம் காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்ட பேரவைக்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.