ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பா அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சவுதி அரேபியாவில் மெக்கா நகரில் அமைந்தள்ள காபா என்றும் இல்லத்திற்கு சென்று வழிபடுவது முஸ்லீம்களின் ஹஜ் என்னும் ஐந்தாம் கடமையாகும். தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமானோர் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து சுமார் 11,000 பேர் 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள அரசிடம் மனு கொடுத்துள்ளனர். இவர்களில் சுமார் 3,100 பேருக்கு மட்டுமே குலுக்கல் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. ஹஜ் புனித பயணத்திற்கு செல்ல விரும்பி மனு கொடுத்துள்ள அனைவருக்கும் அந்த அரிய வாய்ப்பினை மத்திய அரசு வழங்க வேண்டும்.
இதில் குலுக்கல் முறையை அடியோடு கைவிட்டு ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் புனித பயணத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்வதுடன், தமிழக அரசும் இதில் தலையிட்டு அனைவருக்கும் அனுமதி கிடைத்திட இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.