சென்னை: எனது கல்லூரிக்கு வழங்கப்பட்ட அரிசி, பொது விநியோகத்திட்ட அரிசிதான் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிரூபித்தால் என் பொது வாழ்வை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன் என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'' என்பார்கள். அந்த வகை யில்தான் தி.மு.க.வின் மீதும், ஒரு சில குறிப்பிட்ட அமைச்சர்கள் மீதும் அன்றாடம் எதையாவது குறை சொல்ல வேண்டு மென்று பா.ம.க. நிறுவனர் ராமதாசும், அவருடைய ஏடான 'தமிழ் ஓசை'யும் அன்றாடம் செய்திகளை வெளியிட்டும் எழுதியும் வருகின்றன.
இன்று ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளிவந்துள்ள அந்த நாளிதழில் "உணவு அமைச்சரின் கல்லூரிக்குள் வந்து இறங்கிய அரிசி மூட்டை'' என்று தலைப்பிட்டு அந்த பத்திரிகை தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அந்தச் செய்தியை நிரூபிக்கத் தயாரா? என் மீது ஏதாவது களங்கம் இருக்கிறது என்று ஆதாரத்தோடு விளக்கிடத் தயாரா? என்று அமைச்சர் வேலு சவால் விடுத்துள்ளார்.
கல்லூரிக்கு வாடிக்கையாகவும், முறையாகவும், சட்ட ரீதியாகவும் வந்த லாரியை மடக்கி படம் பிடித்து, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசி கல்லூரிக்கு வந்தது போன்ற ஒரு பொய்யான செய்தியை 'தமிழ் ஓசை' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இது போன்ற பொய்யான செய்தியை வெளியிட்டு பிழைப்பு நடத்துவதை விட வேறு எந்தத் தொழிலாவது நடத்தி தன் வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம்.
கல்லூரியில் எந்த சூழ் நிலையிலும், எந்த நேரத்திலும், வழங்கப்பட்ட அரிசி பொது விநியோகத்திட்ட அரிசிதான் என்று நிரூபித்தால் கருணாநிதி அனுமதியோடு நான் என் பொது வாழ்வை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். இது சம்பந்தமாக எனது வழக்கறிஞரை கலந்து நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுப்பேன் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.