தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் படுகொலை செய்யும் சிறிலங்கா ராணுவத்திற்கு மத்திய அரசு ராணுவ உதவி அளித்து வருவதை கண்டித்து அனைத்து கட்சிகள், அனைத்து தமிழ் அமைப்புகள் கூட்டுக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பழ.நெடுமாறன் பேசுகையில், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக்கொல்வதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாற்றினார்.மேலும் அவர் கூறுகையில், ''தனி ஈழம் அமைந்துவிட்டால் தமிழக மீனவர்களை சுடுவதற்கு சிங்கள ராணுவம் அஞ்சும். ஏன் என்றால் விடுதலைப்புலிகள் நமது மீனவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் பழ.நெடுமாறன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ''மத்திய அரசு இறையான்மை உள்ள அரசாக இருந்தால் சிங்கள அரசு மீது படை எடுத்து இருக்கவேண்டும். ஆனால் மாறாக அவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுப்பது வேதனையாக உள்ளது'' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் விஜய.டி.ராஜேந்தர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எம்.பசீர் அகமது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெள்ளையன், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், இந்திய தேசிய லீக் மாநில பொருளாளர் ஜவகர் அலி, அமைப்பு செயலாளர் ஆர்.ஜபருல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.