''இந்திய கடல் எல்லை பகுதியில் மட்டுமல்லாமல் சிறிலங்கா கடல் பகுதியிலும் சென்று தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி பெறுவதில் மத்திய அரசு வெற்றி பெற்று உள்ளது'' தமிழக காங்கிரஸ் தலைவர் கே.பி.தங்கபாலு கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழக கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து, பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று அதில் உறுதியான நடவடிக்கை எடுத்து மீனவர்களை காப்பாற்ற தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினோம்.
அப்போது, சிறிலங்காவில் நடக்கும் சார்க் மாநாட்டுக்கு செல்லும் போது மீனவர்கள் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்தன்படி, பிரதமரும், அவருடன் சென்ற அதிகாரிகள் குழுவினரும் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லை பகுதியில் மட்டுமல்லாமல் சிறிலங்கா கடல் பகுதியிலும் சென்று மீன் பிடிக்க அனுமதி பெறுவதில் மத்திய அரசு வெற்றி பெற்று உள்ளது. அதற்காக அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன'' என்று கே.பி.தங்கபாலு கூறினார்.