காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கொலையில் ஈடுபட்ட 3 பேர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே. மிஷ்ரா இன்று, தேவராஜ், மணிகண்டன், தாமோதரன் ஆகிய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இதையடுத்து அந்த மூன்று பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் தேவராஜ் என்பவன் கடந்த ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டான். மேலும் மற்றொரு திருட்டு வழக்கில் அவனிடம் நடத்திய விசாரணையின் போது, அவனுடைய கும்பலுடன் சேர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 5 கொலைகளை செய்து புதைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 3 பேர் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.