''ஒகேனக்கல் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் நான் பேசும்போது வன்முறை தூண்டுகிறவர்களை உதைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் இந்த பிரச்சனை அன்றே தீர்ந்திருக்கும். இதைத்தான் பாடம் கத்துக்கிட்டேன் என்று கூறினேன்'' என ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
'குசேலன்' படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை வழங்குவதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி நிதி உதவி வழங்கும் விழா கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், சமீபத்தில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நான் பேசியதாக வெளிவந்த செய்திகள் குறித்து பாலச்சந்தர் இங்கே விரிவாக பேசினார். இதற்கு மேல் அதை பற்றி நான் பேச விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ''இந்த விடயத்துக்காக கூடுதல் முக்கியத்துவம் அளிக்க நான் விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறிய ரஜினி, ஒகேனக்கல் பிரச்சினை தொடர்பான உண்ணாவிரதத்தில் நான் பேசும்போது வன்முறை தூண்டுகிறவர்களை உதைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் இந்த பிரச்சனை அன்றே தீர்ந்திருக்கும். இதைத்தான் பாடம் கத்துக்கிட்டேன் என்று கூறினேன்'' என்றார்.
முன்னதாக பேசிய இயக்குனர் பாலச்சந்தர், கன்னட அமைப்புகளுக்கு ரஜினிகாந்த் எதற்காக கடிதம் எழுதினார் என்றால் பல கோடி ரூபாய் முதலீடு செய்து குசேலன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை பல கோடி ரூபாய் கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனிப்பட்ட கருத்தை ஒதுக்கி படத்தை வெளியிட உதவ வேண்டும் என்று ரஜினி கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தை நானும் பார்த்தேன், அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லை. 'பாடம் கற்று கொண்டேன்' என்று கூறியதை 'சாரி என்று போட்டு' இதை ஒரு பிரச்சனையாக ஆக்கிவிட்டனர். நடந்தது நடந்ததாக இருக்கட்டும், நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்று பாலச்சந்தர் கூறினார்.