சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்பேசி, போதை பொருள், சிகரெட் கொடுக்க லஞ்சம் கேட்ட சிறைக்காவலரை ஊழல் தடுப்பு பிரிவு காவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
சென்னை புழல் சிறையில் 2ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் சாலமன். இவர், சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் வாங்குவதாகவும், கைதிகளுக்கு செல்பேசி, போதைப் பொருட்கள் கடத்திக் கொடுப்பதாகவும் லஞ்ச ஒழிப்புப் காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, சிறை காவலர் சாலமனின் நடவடிக்கையை ஊழல் கண்காணிப்பு, தடுப்புப் பிரிவு காவலர்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், புழல் சிறைக்கு வந்த ஒருவர், சிறையில் உள்ள தனது நண்பனிடம் செல்பேசி, கஞ்சா, பீடி, சிகரெட்களை கொடுக்க வேண்டும் என்று சிறைக்காவலர் சாலமனிடம் கேட்டுள்ளார். இதற்கு ரூ.8,000 கொடுத்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறேன் என்று சாலமன் கூறியுள்ளார்.
இந்த தகவல் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு வந்ததை தொடர்ந்து சிறைக்காவலர் சாலமனை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.