சென்னை விமானநிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம சிற்றுண்டி பெட்டியால் (டிபன் பாக்ஸ்) பயணிகள் மத்தியில் பெரும் அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இன்று காலை 2.30 மணியளவில் இந்த சிற்றுண்டி பெட்டி கண்டறியப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்குள் தொடர்ந்து இது போன்ற நிகழ்வு இரண்டாவது முறையாக ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இதையடுத்து, விமானநிலைய வெடி குண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த சிற்றுண்டி பெட்டி சோதனை செய்யப்பட்டது. பின்னர் அதனை திறந்து பார்த்ததில் அதில் வெறும் உணவு மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால் பயணிகள் மத்தியில் இருந்த அச்சம் விலகியது.
இதே போன்று நேற்றும் சென்னை விமான நிலைய நுழைவு வாயில் அருகே கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் (சூட்கேஸ்) பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு புதிதாக தொடங்கி உள்ள அரசு கேபிள் தொலைக்காட்சி சேவையை நிறுத்தவில்லையென்றால், விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று அண்ணாநகர் தபால் அலுவலக முத்திரைப் பதிக்கப்பட்டிருந்தத மிரட்டல் கடிதம் ஒன்று நேற்று முன்தினம் விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பெங்களூரூ, அகமதாபாத் போன்ற இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பையடுத்து விமானநிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்குள் கேட்பாரற்ற கிடந்த பொருட்களால் விமானநிலையத்துக்கு வரும் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.