திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் ஆற்று மணல் கொள்ளையை தடுத்த நிறுத்தக் கோரி ஆகஸ்ட் 4ஆம் தேதி சிவகிரியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே உள்ள 'உள்ளார் கால்வாய்' மூலம் வரும் தண்ணீரினால் 4,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆற்றை நம்பித்தான் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர். சுமார் 100 கி.மீ பரப்பளவு கொண்ட பகுதியில் குடியிருக்கும் மக்கள் குடிநீருக்கும் இந்த ஆற்றை நம்பித்தான் உள்ளனர்.
இந்த ஆற்றில் உள்ள மணல் தி.மு.க.வினரால் தினமும் 200 லாரிகள் மூலம் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுகிறது. இதன் விளைவாக, ஆறே இல்லாத அளவுக்கு அப்பகுதி மிகவும் உருக்குலைந்து மோசமாக காட்சி அளிக்கிறது. இது போன்ற செயல்களால் பாசனத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு தற்போது ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. மணல் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் கணிசமான அளவு குறைந்து இருக்கிறது.
தி.மு.க.வினரை தட்டிக் கேட்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், கருணாநிதியின் மணல் கொள்ளை ஆதரவுப் போக்கைக் கண்டித்தும், உள்ளார் ஆற்றில் மணல் அள்ளப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 4ஆம் தேதி காலை 10 மணி அளவில் வாசுதேவநல்லூர் ஒன்றியம், சிவகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.