சென்னை விமானநிலையத்தில், அயல்நாட்டுக்கு கடத்த இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 450 நட்சத்திர ஆமைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.
அண்ணா சர்வதேச விமானநிலையத்திலிருந்து கொழும்பு வழியாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு இந்த நட்சத்திர ஆமைகளை பயணி ஒருவர் கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, சென்னை மண்ணடியைச் சேர்ந்த அபு பக்கர் (37) என்பவரிடம் நடத்திய சோதனையில் உயிருடன் இருந்த 450 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நட்சத்திர ஆமைகள் மருத்துவத்துக்குப் பயன்படுவதால், இதற்கு மலேசியாவில் கடும் கிராக்கி உள்ளது. நல்ல விலை மதிப்பும் உள்ளது. ஆகையால் தமிழகத்திலிருந்து அயல்நாடுகளுக்கு இதுபோல் அடிக்கடி நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.