மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மறைவிற்கு முதலமைச்சர் கருணாநிதி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா உள்பட தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ''வயதைப் பற்றிக் கவலைப்படாமல் பொதுத் தொண்டுக்காக பாடுபட்ட அவரது இழப்பு அந்தக் கட்சிக்கும் பொதுவாக இந்தியாவிற்கும் மிகப்பெரிய இழப்பாகும், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
''கட்சியின் நிர்வாக குழு உறுப்பினராக 13 ஆண்டுகள் தொடர்ந்து தலைமை பதவி வகித்த அவர், நாடாளுமன்ற அரசியலில் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் கிங்மேக்கராக திகழ்ந்தார். சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், ஒரு மனிதாபிமானியாகவும் அவர் திகழ்ந்தார்'' அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினராலும் மதிக்கப்பட்டவர். மதவாத சக்திகளுடன் சமரசம் செய்து கொள்ள கூடாது என்பதில் பிடிவாதம் காட்டியவர்'' என்று கூறியுள்ளார்.
"கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து, தன் வாழ்க்கை முழுவதையும் அதற்காகவே அர்ப்பணித்த புரட்சிக்காரர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஆவார். கடந்த 25 ஆண்டு காலம் அவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளேன். அவரது மறைவினால் வேதனையில் தவிக்கும் கட்சியினருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு தனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது. தமிழகத்தில் அனைத்து கட்சி கிளைகளும் மூன்று நாட்கள் செங்கோடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில தலைவர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''தனது இறுதி மூச்சு இருக்கும் வரை, மக்களுக்காகப் பாடுபட்டவர். பொது வாழ்க்கையில் சேவைக்கும், தியாகத்திற்கும் அடையாளமாக திகழ்ந்தவர். அவரது மறைவுக்காக கட்சியின் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
"தனது இறுதி மூச்சு வரையிலும் மக்களுக்காக பாடுபட்டு வந்தார். அவரை இழந்து வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.