சென்னை, பன்னாட்டு விமான நிலைய நுழைவு வாயில் அருகே கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பயணிகள் மத்தியில் அச்சமும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
உணவு விடுதி அருகே கிடந்த இந்த மர்ம பெட்டியில் (சூட்கேஸ்) இருந்து அதிகாலை 2 மணியளவில் ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து தகவலறிந்த, விமான நிலையத்தின் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த பெட்டியை திறந்து பார்த்ததில் அதில் சில துணிகளும், ஒரு பழைய கைக்கடிகாரமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கைக்கடிகாரத்தில் இருந்துதான் அந்த சத்தம் கேட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மர்ம பெட்டி, பழைய விமானநிலையத்துக்கு அருகிலுள்ள குளிர்சாதன அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தமிழக அரசு புதிதாக தொடங்கி உள்ள அரசு கேபிள் தொலைக்காட்சி சேவையை நிறுத்தவில்லையென்றால், விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் கடிதம் ஒன்று நேற்றிரவு விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்தது.
இந்த அஞ்சல் அட்டையில் அண்ணா நகர் தபால் அலுவலக முத்திரைப் பதிக்கப்பட்டிருந்தது. அதில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விமான நிலைய பணி மேலாளர் மாதவ ராவ், இது குறித்து விமான நிலைய காவல் துறையினரிடம் புகார் தெரிவித்திருந்தார். காவல் துறையினர் இது பற்றி விசாரித்து வரும் வேளையில் அங்கு இந்த மர்ம பெட்டி கிடந்தது சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.