அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு, மீனவர் பிரச்னை, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்தும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மெமோரியல் வளாகம் முன்பு இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தில் இன்று அறிவிக்கப்பட்ட மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் இயங்க முடியாததால் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தியை பெருக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டு இருக்காது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், விவசாயிகள் மீதும் மீனவர்கள் மீதும் தமிழக அரசுக்கு எள்ளளவும் அக்கறை இல்லை. புதிய சட்டப்பேரவை கட்டுவதிலும், தமிழை செம்மொழி ஆக்குவதிலும் அக்கறை காட்டும் தமிழக அரசு, மின் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அக்கறை எடுத்திருக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், தலைமை நிலைய செயலாளர் பிரகாஷ் உள்பட ஏராளமானோர் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.