''உழவர் மகன் படத்தில் முண்டாசு கட்டி கொண்டு நடித்ததற்காக, விஜயகாந்தால் விவசாயி ஆகிவிட முடியாது'' என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விலைவாசி உயர்வு, இலங்கை பிரச்சினை குறித்தும் ஆகஸ்டு 2ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன் என்றும், தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் சிறிலங்க அரசுக்கு, ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 3ஆம் தேதி பழ.நெடுமாறன் தலைமையில் சென்னையில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
சிறிலங்க தமிழர் பிரச்சினை குறித்தும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு சரி, அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாற்றிய ராஜேந்தர், சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்றுப்பாதை பற்றி ஆராய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை செலவான பணத்திற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
`உழவர் மகன்' படத்தில் முண்டாசு கட்டி கொண்டு நடித்ததற்காக, விஜயகாந்தால் விவசாயி ஆகிவிட முடியாது என்று கூறிய அவர், தற்போது விஜயகாந்த் உச்சகட்ட தலைக்கனத்தில் இருக்கிறார் என்று கூறினார் டி.ராஜேந்தர்.