கைத்தறித் துறை அமைச்சர் என்.கே. கே.பி. ராஜா மீது மேலும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தொடர்ந்த வழக்கில், அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, அவரது ஆட்கள் தன்னுடைய மாமனார் பழனிச்சாமி, மாமியார் மலர்விழி, மைத்துனர் சிவபாலன் ஆகியோரை கடத்திச் சென்று சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும், காவல்துறையினரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் கடத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பேரையும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பழனிச்சாமியின் உறவினர் குகமணி கடத்தப்பட்டதாக அமைச்சர் ராஜா மீது மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், "அமைச்சர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததும் இக்கடத்தல் நடந்துள்ளது' எனக் கூறியுள்ளனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், பழனிவேலு ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பெருந்துறை காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.