தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வேலூர் இன்று மாநகராட்சியாக மாற்றப்படுகிறது. இதனை முதலமைச்சர் கருணாநிதி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. முதமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு வேலூர் மாநகராட்சியைத் தொடங்கிவைத்துப் பேசுகிறார்.
வேலூர் மாநகராட்சியில் 76 உள்ளாட்சிகள் இடம் பெற்று உள்ளன. அவற்றின் மூலம் 9 லட்சத்து 7 ஆயிரம் மக்கள்தொகை கொண்டு 392 சதுர கி.மீ பரப்பளவுடன் மாநகராட்சி உதயமாகிறது.
இதே விழாவில் ரூ.59 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர் கருணாநிதி, ரூ.15 கோடியே 32 லட்சம் மதிப்பில், ஏற்கனவே நிறைவடைந்த வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும், ரூ.9 கோடி மதிப்பில் புதிதாக தொடங்கப்படும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் அமைக்கப்பட்ட கல்வெட்டுகளை திறந்து வைக்கிறார்.
விழாவுக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் ஆர்.வேலு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.