கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 80க்கும் மேற்பட்டவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் 20க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகில் இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறிலங்கப் படையினர் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கையில் சிக்கிய மீனவர்களை தடிகளாலும், இரும்புக் கம்பிகளாலும் அடித்து உதைத்ததுடன், வலைகள் அனைத்தையும் சேதப்படுத்தி படகுகளையும் கடலில் கவிழ்த்து விட்டுள்ளனர்.
சிறிலங்கக் கடற்படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக கடலில் குதித்த மீனவர்கள், பல மணி நேரம் கடலில் மூழ்கியபடி இருந்துவிட்டு, சிறிலங்கக் கடற்படையினர் சென்றபிறகு படகுகளில் ஏறிக் கரைக்குத் திரும்பியுள்ளனர்.
கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.