சென்னை விமானநிலையத்தில் இன்று தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த கூலித்தொழிலாளி மீது மற்றொரு தனியார் விமானத்துக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் அத்தொழிலாளி பலியானார். மற்றொரு விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
தனியார் விமானத்துக்குச் சொந்தமான வாகனம் பயணிகளை இறக்கி விட்டு திரும்பியபோது ஓடுபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளி சிவா (33) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
படுகாயமடைந்த அவர் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அந்த வாகன ஓட்டுனர் விமானநிலைய காவல்துறை அதிகாரிகளிடம் சரண் அடைந்தார்.
இதேபோல், விமானநிலைய ஓடுபாதையில் நடந்த மற்றொரு விபத்தில், கொல்கத்தா செல்ல இருந்த சேகர் (42) என்ற பயணி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த தனியார் விமானத்துக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் காயமடைந்தார். இந்த விபத்து பற்றி விமான நிலைய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.