சென்னையில் நேற்றிரவு விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவர் பதுங்கியிருப்பதாக க்யூ பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்ததை தொடர்ந்து, அந்த வீட்டை காவல்துறையினர் நேற்றிரவு சுற்றி வளையத்தனர். அப்போது, வீட்டில் இருந்த தம்பி அண்ணா என்ற டேனியல் (46) என்பவரை பிடித்தனர்.
அவர் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த சில மாதங்களாக அவர் சென்னையில் தங்கியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
அவரை விசாரணை காவலில் எடுக்க க்யூ பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அப்போது யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்பது குறித்து விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து சிறிலங்காவுக்கு கடத்த முயன்ற அலுமினிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.