''தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி உருவாக வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில், தி.மு.க தலைமையில்தான் கூட்டணிக் கட்சிகள் வரும் தேர்தலைச் சந்திக்கும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை, கத்திவாக்கத்தில் புதிய மேம்பாலத்தைத் திறந்து வைத்து அவர் பேசுகையில், கூட்டணி என்பது ரயில் பாதை போல, ரயில் செல்லும் வகையில் அமைந்தால்தான் பயணம் ஒழுங்காக இருக்கும் என்றும், தமிழகத்தில் கூட்டணி என்ற ரயிலை தி.மு.க. என்ற என்ஜின் தடம் புரளாமல், கவிழாமல் இழுத்துச் சென்று, உரிய இடத்தில் சேர்க்கும். அந்த ரயிலில் காங்கிரஸ் என்ற பெட்டியும் கண்டிப்பாக இருக்கும் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் எழவேண்டியதில்லை என்றார்.
இந்தப் பாலங்கள் மனிதர்கள் கட்டியது. இதைவிட முக்கியம் மனிதர்களை இணைக்கும் நட்புப் பாலம். அந்த நட்புப் பாலத்தை அமைக்க எல்லோரும் முயற்சிக்க வேண்டும். பாலங்கள் அமைக்க கூட்டணி பலம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.